Skip to content
Home » 70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா

70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில்தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக  இது விளங்குகிறது.

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஒரே தலம் இது .
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோவிலுக்குதிரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு நேற்று இரவு கோவிலுக்கு மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்டபிரபு, ஹேமசந்திர‌ பிரபு மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து கஜபூஜை, கோபூஜை செய்து முதல்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று சுவாமி அம்பாளை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இன்று கோவிலுக்கு வந்த நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி மாலை  மாற்றிக் கொண்டு  ஒருவருக்கொருவர் மாறி மாறி இனிப்பு வழங்கி கொண்டனர்.

பூஜை ஏற்பாடுகளை அமிர்தகடேஸ்வரர் குருக்கள் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து குடும்பத்தினருடன் கோவிலை சுற்றி வந்து கள்ள விநாயகரை வழிபட்டு விட்டு, அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.  இவர் 60 வயது பூர்த்தி அடைந்த போது இக்கோவில் சஷ்டியப்த பூர்த்தி விழா செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *