தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை ரஜினிகாந்த் வழக்கமாக கொண்டிருந்தார். 2018-ல் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இமயமலைக்கு செல்லவில்லை. கடந்த மாதம் 15-ந்தேதி மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10-ந்தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக கடந்த 9-ந்தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக ரஜினிகாந்த் இமயமலை சென்றார். இமயமலை, பத்ரிநாத், கேந்தரநாத், பாபா ஜி குகை உள்பட ஒரு வார காலம் புனித தலங்களுக்கும் சென்றார். இமயமலை பயணத்தை முடித்து கொண்டு உத்தரபிரதேசம் மாநிலம் சென்றார். லக்னோ சென்று உ.பி. மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்திய நாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்தார். பின்னர் அயோத்தி சென்று குழந்தை ராமர் ஆலயத்தில் தரிசனம் செய்தார். அவருடன் மனைவி லதா சென்று இருந்தார். 12 நாள் ஆன்மிக பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவரது ரசிகர்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். ரசிகர்களின் மகிழ்ச்சியை கண்டு உணர்ச்சி மிகுதியால் ரஜினிகாந்த், காரின் மேல் பக்க வழியாக ரசிகர்களை பார்த்து கையசைத்து கை கூப்பி வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது,, 4 ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு சென்று வந்தது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வைத்த என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் பட தயாரிப்பாளர், பட இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து படகுழுவினருக்கும் நன்றியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு ரஜினி கூறினார். உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது சர்ச்சை ஆகி இருப்பது குறித்து கேட்டபோது,” வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் தான் செய்தேன் “என்றார். அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தது குறித்து கேட்டபோது, “இமயமலை பயணத்தின் போது அரசியல் தலைவர்களை நட்பு ரீதியாக சந்தித்தேன். அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என கூறி விட்டு சென்றார்.