மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா (70) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜூனியர் பாலையா. சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். நாளை மதியம் இறுதி சடங்குகள் நடக்கிறது.
இந்நிலையில், ஜூனியர் பாலையாவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.