மலையாள சினிமா உலகில் நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக கேரள நடிகர் சங்க தலைவரும்(தற்போது ராஜினாமா செய்து விட்டார்), நடிகருமான மோகன்லால் இன்று திருவனந்தபுரத்தில் தன்னிலை விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. படப்பிடிப்பு மற்றும் உடல் நலம் காரணமாக தாமதமாகி விட்டது. நான் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். நேஹமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா உலககையே தகர்த்து விடும் போல இருக்கிறது. இந்த அறிக்கைக்கு நான் மட்டுமல்ல. ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகமும் பதில் சொல்ல வேண்டும்.
மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலைப்படுகிறேன். எனவே அம்மா (மலையாள சினிமா நடிகர் சங்கம்) அமைப்பு மீது அவதூறு பரப்ப வேண்டாம். எந்த வகையிலும் மலையாள சினிமா பாதிக்கப்படக்கூடாது என்பதில்நான் உறுதியாக இருக்கிறன். நான் பதவியில் இருந்தபோது இந்த கமிட்டி அறிக்கை வெளியானதால் நான் பதவி விலகினேன். என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். பாலியல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக அதிகமாக பேச முடியாது. பொறுமையாக இருங்கள் .எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும். அனைவரும் இணைந்து இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவோம்.
அரசு மற்றும் காவல்துறையை தாண்டி இந்த பிரச்னையில் நான் என்ன செய்துவிட முடியும். ஹேமா கமிட்டி அறிக்கையில் முழுமையாக என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது. 2 மாதத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வரும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையாள சினிமாத்துறையில் 21 சங்கங்கள் உள்ளது. ஆனால் அம்மா சங்கத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.