இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(48). அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் நாடகக்கலை படித்து வந்த இவர் , 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ் மஹால்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கினார். இதைத் தொடர்ந்து, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி என பல படங்களில் நடித்தார். கடைசியாக விருமன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அவரது உடல், சென்னை சேத்துபட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. உடலுக்கு உறவினர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி னர். மனோஜ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மஹால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இளம்வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோல, இளையராஜா, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நடிகர்கள் சரத்குமார், கார்த்தி, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ராஜ்கபூர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது. அங்கும் திரைத்துறையினர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தவெக தலைவர் நடிகர் விஜய், தனது வீட்டில் இருந்து நடந்தே வந்து மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுபோல நடிகர் சிவக்குமார், சூர்யா இயக்குனர்கள் வாசு, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திரைத்துறையினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மாலை 3 மணி அளவில், மனோஜ் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.