மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:- மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறேன். கோவையில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் இங்கு போட்டியிட உள்ளேன். கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது; மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா?.
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொட்டை என்பதை ஏற்க முடியாது. இந்தி ஒழிக என சொல்ல மாட்டேன். தமிழ் வாழ்க என்பேன். இந்தி படித்தால் தான் வேலை என்றால் அந்த வேலை எனக்கு வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
மக்களவை தேர்தல் வரும் 2024 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம். ஆனால் இப்போதே கோவையில் தான் போட்டி என்பதை கமல் அறிவித்து விட்டார். தனித்து போட்டியா, அல்லது கூட்டணியா என்பதை அவர் அறிவிக்கவில்லை. இந்தியாவிலேயே முதன் முதலாக மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக தன்னை அறிவித்துள்ளார் கமல்.