நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தீவிரமாக உள்ளார்.
ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருப்பதால், இந்தியா கூட்டணியில் சேர்ந்து ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இதற்காக கமல் கோவை, தென் சென்னை , மதுரை ஆகிய 3 தொகுதிகளை குறி வைத்து உள்ளார். ஆனாலும் அவர் கோவையில் போட்டியிடவே விரும்புகிறார்.
இந்த நிலையில பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை மறுநாள் (22-ந்தேதி) கோவையில் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நாளை மறுநாள் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் பாராளுமன்ற தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசிக்கிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நாளை மறுநாள் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கோவை வருகிறார். நேராக கூட்டம் நடக்கும் ஓட்டலுக்கு சென்று கூட்டத்தில் பங்கேற்கிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டம் முடிந்த பின்னர் மாலையில் கணியூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அங்கு பேராசிரியர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.