Skip to content

ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

  • by Authour

மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளிப்படைத்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் நிகழ்ச்சி பதிவு செய்திருந்த ஸ்டுடியோவை அடித்து நொறுக்கினர்.

இத்தகைய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்த குணால் கம்ரா மீது மும்பை போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் கம்ரா முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தங்களது சொந்த ஊர் விழுப்புரம் என்றும் தான் மும்பை சென்றால் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்றும் சிவ சேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே மாநிலம் விட்டு மாநிலம் செல்ல கூடிய டிரான்சிட் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சுரேஷ் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர மோகனிடம் முறையிட்டார். இந்த மனுவை இன்று மதியம் அனைத்து வழக்குகளும் முடிந்த பின்பு கடைசி வழக்காக எடுத்து விசாரிப்பதாக நீதிபதி அனுமதி வழங்கினார். இங்கு அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தால்,  2 வாரமோ அல்லது 3 வாரமோ முன்ஜாமீன் கிடைக்கும். அதன் பின்பு மகாராஷ்டிரா சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் தனியாக முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து  அவர் முன்ஜாமீன் பெற்று கொள்ள வேண்டும்.

error: Content is protected !!