பிரபல கன்னட நடிகர் தர்ஷன், இவரது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தனது மேலாளர் மற்றும் இரண்டு சிறைவாசிகளுடன் அவர் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது. அதில் தனது கையில் காபி மற்றும் சிகரெட்டை அவர் வைத்துள்ளார். அது தற்போது கர்நாடகா முழுவதும் சர்ச்சையாகி உள்ளதுகொலை வழக்கு குற்றவாளிக்கு சிறையில் இப்படியான வசதிகளா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சிறை அதிகாரிகளின் உதவியின்றி இது நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறையில் சசிகலா இருந்தபோது அவருக்கும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டார். அத்துடன் தர்ஷனுக்கு இப்படிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டது எப்படி என உடனடியாக விளக்கம் அளிக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டார். சிறைக்கு சென்று சோதரைன நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.