கோவையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இந்த நிலையில் மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேற்று காலை கோவை வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆங்காங்கே மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டார்.
கள்ளிமடை கதிரவன் லே அவுட் பகுதியில் மண் ரோடு சேறும் சகதியுமாக காணப்பட்டது. சங்கனூர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால்
தண்ணீர் பொங்கி குடியிருப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகள் வெள்ளமென காட்சி அளிக்கிறது. அங்கு வந்து பாருங்கள் என கேட்டனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் சேற்றில் நடந்து அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். புதிதாக ரோடு அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நேற்று மாலையே அங்கு ரோடு போடும் பணி தொடங்கப்பட்டது. இரவு மழை இல்லாததால் இரவோடு இரவாக தார்சாலையும் போடப்பட்டது. அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையை அந்த பகுதி மக்கள் மனதார பாராட்டினர்.