அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அன்பழகன் பேசும்போது, அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில், பேராசிரியர்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரியின் முதல்வர் செந்தமிழ் செல்வன், கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வருவதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து மாவட்ட நிர்வாகமும், உயர்கல்வித்துறையும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
எனவே கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பேராசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள விளாங்குடி அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து விளாங்குடி அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.