வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றிரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகள் மூலம் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், பாஸ் கிடைக்காத ரசிகர்களில் சிலர் தடையை மீறி உள்ளே வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் கிரே கலர் சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் மாஸ்ஸாக விஜய் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரன், அம்மா ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபகாலமாக புதுப்பட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை மறைமுகமாக பேசுவதை விஜய் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல் குட்டிக்கதை ஒன்றை மட்டும் விஜய் கூறினார். “வாரிசு உறவுகளைப் பற்றிய படம் அதனால் அதைப் பற்றி ஒரு குட்டி கதை. ஒரு தந்தை, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு சாக்லேட்களின் கதை.” என்று தொடங்கிய விஜய், “ஒரு குடும்பத்தில அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்காங்க. அப்பா தினமும் தன் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வராரு. தங்கச்சி தனக்கு கொடுத்த சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்ருவாங்க. அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளிச்சு வைச்சு சாப்பிடுவான். ஒரு நாள் தங்கச்சி அண்ணன்கிட்ட அன்புன்னா என்னனு கேட்கும் போது, நீ எடுப்பனு தெரிஞ்சும் நான் அதே இடத்துல திரும்ப சாக்லேட் வைக்கிறேன்ல அதுக்கு பேரு தான் அன்பு. அன்பு மட்டுமே உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரு விஷயம். ரசிகர்களின் அன்பே எனக்கான போதை. அன்பே என்பது உலகின் மிகப்பெரிய ஆயுதம்” என்றார்.
“இதையும் குட்டிக்கதையா வச்சுக்கலாம்” என்று தொடர்ந்து பேசிய விஜய், “1990களில் ஒரு நடிகர் எனக்கு போட்டியாளராக வந்தார். நான் எங்கு சென்றாலும் அவர் வந்தார். கொஞ்ச நாட்களில் எனக்கு சீரியசான போட்டியாளரா மாறினார். அவரின் வெற்றியால் நானும் கடினமாக ஓடினேன். நான் அவரை விட வெற்றிபெற விரும்பினேன், அத்தகைய போட்டியாளர் நம் அனைவருக்கும் தேவை. அந்த போட்டியாளர் உருவான ஆண்டு 1992. அவர் வேறு யாருமல்ல, அவர் பெயர் ஜோசப் விஜய். ஆம், எனக்கு நானே போட்டியாளர். உங்களுக்கு எப்போதும் ஒரு போட்டியாளர் தேவை. முதலில் உங்களுடன் போட்டியிடுங்கள், உங்களுக்கு நீங்களே சொந்த போட்டியாக இருங்கள்” என்று கூறினார்.