Skip to content

தஞ்சை- புதுகை செல்லும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து… ரவுண்டான அமைக்க வேண்டும்..

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால் ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வழியாக புதுக்கோட்டை உட்பட பிற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலை எப்பொழுதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதி அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரத்தநாட்டில் இருந்து வல்லம் திருச்சிக்கு செல்லும் வாகனங்கள், வல்லத்தில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை வரும் வாகனங்கள் என திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியை கடந்துதான் செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் இப்பகுதி வழியாக அதிகளவில் சென்று வருகின்றன.

திருக்கானூர்பட்டி நால் ரோட்டில் வேகத்தடை மற்றும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இந்த நால் ரோடு பகுதியில்தான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து போன்றவை இப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும் நடந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் இப்பகுதியில் வேகமாக வரும் பேருந்துகள், வாகனங்கள் எதிரில் வரும் வாகனங்களுடன் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் திருக்கானூர்பட்டி நால் ரோட்டை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான கிராமப் பகுதிகள் அமைந்துள்ளது. மேலும் இங்கு நெல், நிலக்கடலை, சோளம், சம்பங்கி பூ, செண்டிகைப்பூ என விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். இந்த சாகுபடி வயல்களுக்கு தேவையான இடுபொருட்களை விவசாயிகள் தங்களின் இருச்சக்கர வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். மேலும் அறுவடை முடிந்து அவற்றையும் வாகனங்களில் வைத்து எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக விவசாயிகள் இருச்சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் வலது புறம் மற்றும் இடதுபுறத்தில் இருந்து வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். நான்கு புறமும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போதும் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!