அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூனாபுரி கிராமம் வீரனார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது-48). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின் காரணமாக, விருத்தாச்சலம் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆண்டிமடம் சாலையில் ஆத்துகுறிச்சி செக் போஸ்ட் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஒன்று லோகநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.