ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அன்னாவரம் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு எம்சிஏ மாணவி சசிகலா. இவர் நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்வதற்காக புறநகர் ரெயிலில் விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வடா ரெயில் நிலையத்திற்கு வந்தார். ரெயிலில் இருந்து கீழே இறங்கியபோது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த சக பயணிகள் உடனடியாக ரெயில் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர், அவரை பயணிகள் மீட்க முயற்சித்தனர். ஆனால், ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட அவரை மீட்கமுடியவில்லை. அங்கு விரைந்த ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள், மீட்புக்குழுவினர் மாணவி சசிகலாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர தீவிர முயற்சிக்கு பின் சசிகலா மீட்கப்பட்டார். ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய சசிகலா மீட்கப்பட்ட உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் உள் உறுப்புகள் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி மீட்கப்பட்ட மாணவி சசிகலா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் உள் உறுப்புகள் செயல் இழந்ததால் மாணவி சசிகலா சிகிச்சி பலனின்றி உயிரிழந்தார். ரெயில் நடைமேடையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.