பெங்களூருலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு விரைவு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலத்தில் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி சொகுசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோர விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்து விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 64 பேரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மேலும் 3 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னை அடையார் பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆனது.
விபத்து குறித்து வாணியம்பாடி ரூரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்தை வேலூர் டிஐஜி முத்துசாமி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.