ராமேசுவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வளர்ந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பணியாற்றினார்.
“ஏவுகணை விஞ்ஞானி”, “மக்களின் குடியரசுத் தலைவர்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அவரது “அக்னி சிறகுகள், இந்தியா 2020” உள்ளிட்ட புத்தகங்கள் பல இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடியதாக திகழ்கிறது. 1981-ல் பத்ம பூஷண், 1990-ல் பத்ம விபூஷண், 1997-ல் பாரத ரத்னா விருது பெற்றவர்.
மாணவர்களுடன் உரையாடுவதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவ்வாறே 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா தலைநகர் ஷில்லாங் ஐஐஎம்-ல்மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். அவருக்கு இன்று 9 வது நினைவு தினம். இதையொட்டி ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.