திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் செந்தில்குமார் பொறியியல் பட்டதாரி ஆவார். அதே ஊரைச் சேர்ந்த, தனக்குத் தெரிந்த அரியலூர் அரசு தொழில் பயிற்சி மையத்தில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்த அருண்குமார் மற்றும் அவருடைய நண்பர்களான கலைச்செல்வன்,கார்த்திக்,ஆனந்தகுமார் ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டு இவர்களின் மூலம் செந்தில்குமாருக்கு ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் பதவி வாங்கி தருவதாகவும், மாதம் 60 ஆயிரம் சம்பளம் என்றும், 3 மாதத்தில் பணி ஆணை வாங்கி தருவதாகவும, அதற்காக ரூ.15,00,000/-லட்சம் ஆகும் என்றும், தவறும் பட்சத்தில் பணத்தை திருப்பி தருவதாகவும்,மேலும் அருண்குமார் தனது தங்கை மற்றும் மைத்துனருக்கு கார்த்தி மூலம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கியதாகவும் ஆசை வார்த்தைக் கூறியுள்ளனர்.
இதற்காக செந்தில்குமார் ரூ.2,50,000/- முன்பணத்தை கலைச்செல்வனின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும் 12.12.2019 அன்று ரூ.8,50,000/-பணத்தை அருண்குமாரிடம் கையில் ரொக்கமாக கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகையை பணியில் சேர்ந்த பின்பு தருமாறும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் 3 மாதம் கழித்து பணி ஆணை வரவில்லை என்றும்,பணத்தை திருப்பி தருமாறும் அருண்குமாரிடம் நேரிலும், கைப்பேசி வாயிலாகவும் செந்தில்குமார் கேட்டபொழுது, பணம் திரும்ப தர முடியாது என்றும் பணத்தை திருப்பி கேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் (பொறுப்பு)
வழிகாட்டுதலின்படி காவல் ஆய்வாளர் குணமதி, காவல் உதவி ஆய்வாளர்கள் அமரஜோதி , முருகன் தலைமையிலான காவல் துறையினர் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி சீனிவாச நகர் சென்று கலைச்செல்வனை கைது செய்தனர்.இதனை அடுத்து கலைச்செல்வன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிமன்றம் உத்தரவு படி காவல்துறையினர் கலைச்செல்வனை அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.