ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய், மில்க் கேக், பாயாசம் மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஆவின் தயாரிப்பு பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப காலமாக அவினில் பால் விலை மற்றும் மற்ற பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளானர். ஏற்கனவே காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஆவின் விலை உயர்வு பொதுமக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளது.
ஆவினில் பால் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலையும் உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு
வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, அரை கிலோ நெய் ரூ.50 உயர்ந்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ஆவின் நெய் (ரூ.630) ரூ.70 உயர்ந்து ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று அரை கிலோ (500 கிராம்) வெண்ணெய் (ரூ.260) ரூ.15 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 15 மில்லி லிட்டர் நெய்யின் விலை 14 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் , 100 மில்லி லிட்டர் நெய்யின் விலை 70 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், 100 மில்லி லிட்டர் நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் நெய் பாட்டில் 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும், 500 மில்லி லிட்டர் நெய் பாட்டில் 315 ரூபாயிலிருந்து 365 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் வெண்ணெய்யின் விலையானது 100 கிராம் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.