தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியதாவது:
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.101 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை பல்க் புக்கிங் செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறது.
கூட்டுறவுச் சங்கங்கள், தனியார், அரசு அலுவலகங்களில் பல்க் புக்கிங் செய்ய ஊக்கப்படுத்தி வருகிறோம். இதுதவிர, ஆவின் உற்பத்தி மையங்களில் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் தரமானதாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.