கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. 30ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழா காவிரியில் தான் கொண்டாடப்படும் என்ற போதிலும்நாளை ஆபத்தான நிலையில் வெள்ளம் பாயும் காவிரி கரைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
படித்துறைகள் உள்ள இடங்களில் மட்டும் பாதுகாப்புடன் விழாவை கொண்டாடும்படி கலெக்டர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
28்ம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் 30ம் தேதி இரவே கல்லணை வந்தடைந்தது. 31ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மதியம் 12 மணி அளவில் சுவாமிமலை தான் சென்று உள்ளது. இன்று மாலை கும்பகோணம் சென்றடையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே நேரம் நாளை காலை 10 மணிக்கு பிறகே இந்த தண்ணீர் மயிலாடுதுறை வரும் என தெரிகிறது. இதனால் ஆடிப்பெருக்கு கொண்டாட முடியாத ஏமாற்றத்தில் மயிலாடுதுறை மக்கள் உள்ளனர்.
வெண்ணாற்றில் திறக்கப்படும் தண்ணீர் திருவாரூர் மாவட்டத்திற்கு செல்லும். அந்த தண்ணீர் நீடாமங்கலம் மூணாறு தலைப்பு வழியாக மூன்றாக பிரிந்து மாவட்டம் முழுக்க செல்லும். ஆனால் இன்னும் திருவாரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் வரவில்லை.
வெள்ளம் அதிகம் செல்வதால் திருச்சி மாவட்ட மக்கள் காவிரி, கொள்ளிடத்தில் நீராட முடியாத நிலையில் உள்ளனர். அதே நேரத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் தண்ணீர் வராததால் காவிரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.