சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜக நிர்வாகி ஹரீஷ் உட்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர். இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இதுவரை பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், நாகராஜன், பேச்சி முத்துராஜா, நடிகர் ரூஸோ உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முதற்கட்டமாக 50 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை போலீஸார் சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பாஜக பிரமுகரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் துபாய் சென்று விட்டார். அவரை பிடிக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட இருந்தனர். இந்த நிலையில் அவர் போலீசில் ஆஜராவதாக தெரிவித்து 2 தினங்களுக்கு முன் சென்னை வந்தார். இன்று காலை அவர் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் இதுவரை எங்கே தலைமறைவாக இருந்தீர்கள் என்று கேட்டனர்.
நான் தலைமறைவாகவில்லை. எல்லோரும் இங்கே இருக்கும்போது நான் ஏன் தலைமறைவாக வேண்டும். விசாரணை முடிந்து வந்து விரிவாக பேசுகிறேன்’ என்று கூறிவிட்டு விசாரணைக்கு சென்றார். அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.