திருமணமும், விவாகரத்தும் வெளிநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்கு என ஒரு காலத்தில் நம்மவர்கள் வெளிநாட்டினரை கலாய்ப்பார்கள். இப்போது நம்ம திரையுலகும் வெளிநாடு லெவலுக்கு வந்து விட்டது. இதற்கு உதாரணங்களை தேட வேண்டியது இல்லை. உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பது போலத்தான். அந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறார்கள் ஜெயம் ரவி-ஆர்த்தி.
சினிமா எடிட்டர் மோகனின் மகன் ரவி. ஜெயம் படத்தில் அறிமுகமானதால் இவர் ஜெயம் ரவி ஆனார். பிறந்தது மதுரை திருமங்கலம், வளர்ந்தது, கல்லூரி கல்வி வரை பயின்றது எல்லாம் சென்னையில் தான். குழந்தை நட்சத்திரமாக 3 படங்களில் நடித்தார். பின்னர் மும்பைக்கு சென்று நடிப்பு கல்லூரியில் பயிற்சி பெற்றார். ஒரு படத்திற்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றிய ரவி….2003 ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அடுத்தடுத்த படங்களின் மூலம் சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
இவருக்கும் சென்னையை சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009ல் திருமணம் நடந்தது.பிரபல டிவிதொடர் புரொடியூசர் சுஜாதா மற்றும் தொழிலதிபர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் ஆர்த்தி. சுஜாதா பல டிவி தொடர்களைத் தயாரித்துள்ளார். சில படங்களையும் தயாரித்தவர்.. ஆர்த்தி ஸ்காட்லாந்து நாட்டில் வைத்துத் தான் முதல்முறையாக ஜெயம் ரவியை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் கொஞ்சக் காலத்திலேயே காதல் மலர்ந்தது.
ஜெயம் ரவி தான் இரு வீட்டிலும் பேசி சம்மதிக்க வைத்தாராம். அதைத் தொடர்ந்தே 2009ல் திருமணம் நடந்துள்ளது. சிறு தொழில் ஒன்றையும் கவனித்து வரும் ஆர்த்தி, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பலோயர்கள் உள்ளனர். அவரது பேஷன் ஆடைகளுக்கும் சோஷியல் மீடியாவில் தனி ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி பிரிய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஒரு கட்டத்தில் ஆர்த்தி தனது சோஷியல் மீடியாவில் ஜெயம் ரவி உடன் இருக்கும் அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தார். இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல் பரவியது. இருப்பினும், அதை இத்தனை காலம் இரு தரப்பும் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை நடிகர் ஜெயம் ரவி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சுமார் 15 ஆண்டுகள் நீடித்த ஜெயம் ரவி- ஆர்த்தி திருமண வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.நாங்கள் பிரிகிறோம் . இது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என அதில் கூறியிருந்தார். சூட்டோடு சூடாக செவ்வாய்க்கிழமை சென்னை கோர்ட்டிலும் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்து விட்டார்.
அதுவரை அமைதி காத்த ஆர்த்தி இன்று புதன்கிழமை தன்னிலை விளக்கம் அளித்தார்.அதில அவர் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இதுமுழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 13 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கவுரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையஇழந்து விட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன் ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது.
நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல… ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன்.
ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும் எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என்முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன் .இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிகை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்தகாலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.