டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி பதவி காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி டில்லியில் இண்டியா கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டு 7 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதே சமயம் ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் தனித்துபோட்டியிட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு வரப்போகும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என ஆத்மி அமைச்சர் கோபால் ராய் நேற்று தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில் லோக்சபா தேர்தலில், சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சிறையில் உள்ள நிலையில், இக்கட்டான சூழலில் இத்தேர்தலை நாங்கள் எதிர்கொண்டோம். டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். டில்லியில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே இண்டியா கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்தோம். எனவே, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி சேர்ந்து 2 மாதங்களே ஆன நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது..