Skip to content
Home » ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

  • by Senthil

தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை பொழிந்து, ஆற்றில் வெள்ளம்  கரைபுரண்டு வரும்போது புதுவெள்ளத்தை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள்.  காவிரி தமிழகத்தில் அடியெடுத்து வைக்கும் ஒகேனக்கல் முதல்  காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகார்  வரை காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

வேளாண்மைக்கு ஆதாரமான நீரை வணங்கி, விதைக்க ஆரம்பிக்கும் ஆடிப்பெருக்கு விழா சங்க காலம் முதல் இந்த நாள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. நீரை பயன்படுத்திப் பயிர் வளர்க்கும் வழிகளோடும், மழையையும் அதைப் பயன்படுத்துவதை நினைவுகூரும் நாளாகவும் ஆடிப்பெருக்கு அமைகிறது.

இந்த நல்ல நாளில் நீர் நிலைகள், ஆறுகள் அருகே பொதுமக்கள் ஒன்றாக கூடி, தண்ணீரை வணங்கி, வயலில் விதைக்கும் பணிகளை ஆரம்பிப்பர். அதை கொண்டாடும் வகையில் கிராமப்புற சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வார்கள். ஆற்றங்கரையில் மக்கள் கூடியும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வார்கள். பெண்கள் ஆற்றங்கரையில், சாணத்தால் மெழுகி கோலமிட்டு, படையலிட்டு செழிப்பான விளைச்சலைத் தருவதற்காக இயற்கையை போற்றும் விதமாக அகல் விளக்கேற்றி வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டு வழிபடுவர். தஞ்சை மாவட்டத்தில்  குடும்பத்தோடு ஆற்றுக்கு செல்லும்போது சிறுவர்கள் சிறிய சப்பரம் போன்ற தேரை இழுத்து செல்வார்கள். இதற்காகவே ஆற்றங்கரைகளில் நேற்று முதல் சப்பரம் விற்பனை களைகட்டியது.

புதுமணத்தம்பதிகள் தங்கள் திருமண நாளில்  அணிந்த மாலைகளை ஆடிப்பெருக்கு நாளில்  ஆற்றுக்கு கொண்டு வந்து தண்ணீரில் விடுவார்கள். அத்துடன்  தாலி பெருக்கு சடங்கும் நடத்துவார்கள். கன்னிப்பெண்கள்  விரைவில் திருமணம் நடக்க வேண்டி  இயற்கையை வழிபட்டு தங்கள் கைகளிலும், கழுத்திலும் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.

ஆற்றில் வழிபாடு முடிந்ததும் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த தேங்காய், தக்காளி, எலுமிச்சை, தயிர், சர்க்கரைப் பொங்கல்  போன்ற சித்ரான்னங்களை  உண்டு மகிழ்வர். ஆடிப்பெருக்கு நாளில் இயற்கை மற்றும் கடவுளை வழிபடுவதன் மூலம், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

மேட்டூர் அணை காவிரியில் இன்று அதிகாலை முதல் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியது.  அணை முனியப்பன் கோயிலில் கிடா வெட்டி பொங்கலிட்டு  ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் காட்டுப்புத்தூர், தொட்டியம், முசிறி,  கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை, குளித்தலை மற்றும் முக்கொம்பு, திருவரங்கம் அம்மா மண்டபம்,  அய்யாளம்மன் படித்துறை  மற்றும்  தஞ்சை மாவட்டம் கல்லணை,  திருவையாறு புஷ்பமண்டப படித்துறை, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் என அனைத்து இடங்களிலும் அதிகாலை முதல் மக்கள் குடும்பம் குடும்பமாக  காவிரிக்கு சென்று காவிரி தாயை வணங்கி வருகிறார்கள்.

இதையொட்டி  காவிரி ஆற்றங்கரை பகுதிகளில்  போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.இதுபோல  நெல்லை மாவட்டத்தில்  தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா  வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!