விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா அதிமுகவில் சேரப்போவதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசினார். அந்த கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று காலை ஆதவ் தவெக அலுவலகம் வந்தார். அவரை புஸ்சி ஆனந்த் அழைத்து சென்றார்.
அதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணி அளவில் தவெக தலைவர் விஜய் கட்சி அலுவலகம் வந்தார். பின்னர் ஆதவுடன் அவர் பேசினார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல் குமாரும் அங்கு வந்திருந்தார்.
அவர்களுடன் விஜய் 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியும், நிர்மல் கமாருக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் ஆதவ் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.