விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.31) அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தவெகவில் இணைந்த சில மணி நேரங்களில் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜுனா அங்கு திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆதர் அர்ஜுனாவுடனான சந்திப்புக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.. ஆதவ் அர்ஜுனா விசகவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டபோது அதை ஒரு பகையாக கருதவில்லை. கருத்தியல் ரீதியாக முரண்கள் இருந்தாலும், களத்தில் எதிரெதிர் துருவங்களில் நின்று செயல்பட்டாலும் இத்தகைய நட்புறவை பேணுவது அரசியலில் ஒரு நாகரீகமான அணுகுமுறை. எங்கள் சந்திப்பில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. வேறு கட்சியில் இணைந்தாலும் மரியாதை நிமித்தமாக ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்தார். இதில் அரசியல் கிடையாது. பெரியாரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக ஆதவ் என்னிடம் பகிர்ந்தார். ஆதவ் அர்ஜுனாவுக்கு எனது வாழ்த்துகள் என்றார். தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜூனா .. எங்கு கள அரசியலை கற்றுக் கொண்டேனோ அங்கு வந்து என் ஆசான் திருமாவளவனிடம் ஒரு தனயனாக வாழ்த்து பெற்றேன். பெரியார் மற்றும் அம்பேத்கருடைய கொள்கைகளை திருமாவளவனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். இந்த பயணத்தில் எந்த முடிவு எடுத்தாலும் என் ஆசானிடம் கலந்துரையாடி என் பயணத்தை தொடங்குவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதன் வெளிப்பாடாகத்தான் இந்த சந்திப்பு.கொள்கைரீதியாக என்னுடைய பணி மக்களுக்கானதாக எப்போதும் இருக்கும். அதிகாரத்தை அடைவதற்கான பயணத்தில் கொள்கைப்படி அரசியலை உருவாக்குங்கள் என்பதுதான் திருமாவளவன் எனக்கு கொடுத்த அறிவுரை. எங்களுக்கும் திருமாவளவனுக்கும் கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. நாங்கள் எதிரெதிர் துருவம் அல்ல. தவெக தலைவர் விஜய்க்கும் சரி, விசிக தலைவர் திருமாவளவனுக்கும் சரி, ஒரே கொள்கைதான்.. என்றார்.
ஆதவ் அர்ஜூனா சந்திப்பு.. இது அரசியல் இல்லை என திருமா பேட்டி..
- by Authour
Tags:Aadhav ArjunaAadhav Arjuna Joins TVKAadhav Arjuna meets VijayThirumavalavanஆதவ் அர்ஜூனா -விஜய் சந்திப்புஆதவ் அர்ஜூனா-திருமா சந்திப்பு