வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறை செயலர், சட்ட செயலர், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், இபிஐசி-ஐ ஆதாருடன் இணைப்பதற்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 326 மற்றும் இது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையின் கீழ் இந்த நடவடிக்கையை எடுப்பதென முடிவு செய்யப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு என்பது தன்னார்வ நடவடிக்கையாகவே இருக்கும். ஏற்கெனவே, இதனை 65 கோடி பேர் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தொடர்ச்சியான புகாரால்தான் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனாலும், தகுதியான ஒரு இந்திய குடிமகன்கூட வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திட வேண்டும். அதேநேரம், எந்தவொரு குடிமகனின் தனியுரிமையும் மீறப்படக்கூடாது என தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.
எல்லை மாவட்டங்களில் உள்ள மக்களின் அடையாளங்களை கண்டறிவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணவும், உண்மையான வாக்காளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
யுஐடிஏஐ மற்றும் தேர்தல் ஆணையத்தின் நிபுணர்களிடையே இபிஐசி-ஆதார் இணைப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் தொடங்கப்பட உள்ளது.