புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 60). இவர் வளையப்பேட்டை வி.கே.எஸ். நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம்(பிப்ரவரி) ஈரோடு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக 14-ந் தேதி நள்ளிரவு தாராசுரம் பஸ் நிலையத்தில் இறங்கி குட்டியான தெரு வழியாக மனைவியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் கேசவன் மற்றும் அவரது மனைவியை மிரட்டி2 செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதே போல் கடந்த 12-ந் தேதி அதிகாலை கும்பகோணம் ரெயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்திற்கு பெண் ஒருவர் தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதே போல் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை மார்க்கெட்டிற்கு வெளியிலே நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் காய்கறி வாங்கி விட்டு வெளியே வந்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். தனது மோட்டார் சைக்கிளை மர்மநபர் யாரோ திருடி சென்றுவிட்டதாக கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலைத்தில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து 3 பேரும் தனித்தனியாக அந்தந்த சரக போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கும்பகோணம் உட்கோட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கும்பகோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கிட் சிங் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், தலைமை காவலர் பாலசுப்ரமணியன், முதல் நிலை காவலர் ஜனார்த்தனன், காவலர் முருகராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மர்மநபர்களை வலைவீசி தேடினர். மேலும் திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வழிப்பறி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சுவாமிமலை அருகே உள்ள புளியம்பாடி, காலனி தெரு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் அருணாச்சலம் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்டவரை உடனே கைது செய்த தனிப்படை போலீசார் போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.