உதகை அருகே உள்ள கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தை சேர்ந்தவர் கேந்தர் குட்டன்(38) தோடர் பழங்குடியினத்தை சார்ந்த இவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் நிலையில் நேற்று மாலை எருமையை தேடி வன பகுதிக்குள் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை உறவினர்கள் இரவு முழுவதும் தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடிய வில்லை. அதனை தொடர்ந்து இன்று காலை மீண்டு தேடிய போது கேந்தர் குட்டனின் உடல் கவர்னர் சோலை பகுதியில் கண்டுபிடிக்கபட்டது.
அப்போது அவரை புலி அடித்து கொன்று பாதி உடலை சாப்பிட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அது குறித்து உடனடியாக பார்சன்ஸ் வேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலகிரி வடக்கு வன கோட்ட வனத்துறையினர் மற்றும் பைக்காரா காவல்துறையினர் பாதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே அங்கு திரண்ட தோடர் பழங்குடி இன மக்கள் கேந்திர குட்டனை தாக்கி கொன்ற புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர். மேலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே போன்று ஒருவர் மாயமானதாகவும் அந்த பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு ஏற்படுத்தி தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.