தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஓடும் ரெயிலில் வாலிபரிடம் லேப்டாப், செல்போன் திருடியவர் போலீசில் வசமாக சிக்கினார்.
மன்னார்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் வைத்தியநாதன் (30). இவர் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு ரெயிலில் வந்து வந்து கொண்டிருந்தார். நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று புறப்பட்டபோது வைத்தியநாதன் தூங்கிவிட்டார். மன்னார்குடி வந்த பிறகு விழித்துப் பார்த்த வைத்தியநாதன் தான் வைத்திருந்த லேப்டாப் , செல்போன் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ் பாரதி என்பவரிடம் நடந்த விஷயம் குறித்து கூறினார்.
அப்போது ரெயில் நிலையத்திற்கு வெளியே ஒரு நபர் லேப்டாப் பேக்குடன் நின்று கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த வைத்தியநாதன் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து தஞ்சாவூர் ரயில்வே போலீசில் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த உதயகுமார் (23) என்பதும், வைத்தியநாதனிடம் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து உதயகுமாரை போலீசார் கைது செய்து லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்தனர்.