கோவை, மருதமலை சுற்று வட்டார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், வடவள்ளி, சோமையனூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு கடைகளில் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்கள், தோட்டத்து வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு விலங்குகளுக்கு வைக்கப்பட்டு இருந்த தவிடு, புண்ணாக்கு போன்ற தீவனங்களையும், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி சூறையாடி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் விவசாயிகளின் பயிர்களை வளர்ப்பதற்காக விதை, நெல், உரம், தண்ணீர் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு தங்களின் சொத்துக்களை அடமானம் வைத்தும், விற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் இழந்து வருகின்றனர். இதனால் வாழ வழியின்று விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்கு செல்லும் நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சின்ன தடாகம் அருகே உள்ள காளையனூரில் செல்வகுமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோரின் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழை, தென்னை போன்ற பயிர்களை தின்று சேதப்படுத்தி சூறையாடிச் சென்று உள்ளது. அங்கு செல்வகுமாரின் தோட்டத்து வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒற்றைக் காட்டு யானை வாழை மரங்களை சூறையாடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதுபோன்று பயிர்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி, தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட அரசும், வனத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.