சென்னை சூளைமேடு பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடை மற்றும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. தரை தளம் மற்றும் முதல் தளம் என இரு தளங்களுடன் செயல்பட்டு வந்த இந்த இரும்புப் பொருட்கள் குடோனில் நேற்று இரவு 9 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியதில் குடோனின் இரு தளங்களில் உள்ள பெரும்பாலான பகுதியில் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வான் உயரத்திற்கு கரும் புகைகள் எழுந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் அண்ணா நகர், மதுரவாயில், எழும்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் அந்த 8 வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் அக்கம் பக்கத்தில் வீடுகள் இருந்ததன் காரணமாக முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு 4 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. குடோன் உள்ளே யாரும் இல்லாததாலும் தீ விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டதாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.