தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அவர் வயிறு வலிப்பதாக சக மாணவிகள் மற்றும் பேராசியையிடம் கூறிவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்த கல்லூரி மாணவி உடலில் மாற்றங்களை கண்டுள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில் ரத்தகறை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் அந்த மாணவியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மாதவிடாய் காரணமாக ரத்தகறை உள்ளது. இதனால் உடல் சோர்வாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனாலும் அந்த மாணவிக்கு தொடர்ந்து ரத்த போக்கு சகமாணவிகள் கல்லூரி பேராசிரியையிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மாணவியை
கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் மாணவிக்கு குழந்தை பிறந்ததால் தான் ரத்த போக்கு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை கேட்ட கல்லூரி பேராசியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் டாக்டர்கள் அந்த மாணவியிடம் குழந்தை குறித்து கேட்டதற்கு கழிவறை அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே மாணவியுடன் இருந்த பேராசிரியைகள் ஆம்புலன்ஸ் உதவியுடன் கல்லூரிக்கு சென்று அங்கு குப்பை தொட்டியில் சிறு சிறு காயங்களுடன் இருந்த பெண் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியையும், குழந்தையையும் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆடுதுறை அனைத்து மகளிர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவியும் அவரது உறவினரும் கடந்த சில ஆண்டாக காதலித்துள்ளனர். அவர்கள் நெருங்கி பழகியதால் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் வயறு பெரிதாக இருப்பது குறித்து யாரும் கேட்டால் பல்வேறு காரணங்களை கூறி மறைத்து வந்துள்ளார். இருப்பினும் கடந்த 30-ந் தேதி கல்லூரிக்கு வந்த மாணவிக்கு பிரசவ வலி வந்துள்ளது. இதனால் அவரே கல்லூரி கழிவறையில் பிரசவம் பார்த்துள்ளார். மேலும் வெளியில் தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்ற எண்ணத்தில் பிறந்த சிசு என்று கூட பாராமல் குப்பை தொட்டியில் போட்டு சென்றுள்ளார் என்றனர்