கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிக்கு அருகிலேயே ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையும், மீன் மார்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு போடப்படும் கழிவுகளை உட்கொண்டு தெரு நாய்கள் அப்பகுதியில் அதிகளவில் சுற்றி வருகின்றன. இன்று பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் தரணீஸ் என்ற மாணவனை, பள்ளி வளாகத்தில் புகுந்த வெறி நாய் ஒன்று மாணவனை கடித்து விட்டு தப்பியோடி விட்டது.
இதனை பார்த்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போன்று பள்ளியின் அருகில் உள்ள சிவானந்த தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அஞ்சனா என்கின்ற இரண்டரை வயது சிறுமியையும், அந்த தெருவில் வசிக்கும் சத்யா என்பவரின் நாயையும் கடித்து விட்டு தப்பியோடியது.
மேலும், வெங்கடேஷ் என்பவர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த போது, அவரையும் அந்த நாய் கடிக்க பாய்ந்துள்ளது . அவர் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் பிளாஸ்டிக் மூடியை எடுத்து தடுத்ததால், நாய் மூடியை கடித்து விட்டு தப்பியோடி விட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் வெறி நாயை தேடி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்