ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, யானை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் வருவதுண்டு.
இந்நிலையில் சில்லி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக ஆழியார் – வால்பாறை சாலையிலும் நவமலை சாலையிலும் சுற்றி திரிகிறது. மேலும் அவ்வப்போது சின்னார் பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு மற்றும் மின்வாரிய குடியிருப்பு அருகே சுற்றி வரும் இந்த ஒற்றை காட்டு யானை பொதுமக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பலா,கூந்தப்பனை பாக்கு உள்ளிட்ட மரங்களையும் சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சின்னார் பதி குடியிருப்பு பகுதிக்கு சென்ற யானை அங்கிருந்த கூந்தப்பனை மரத்தை மின்கம்பத்தின் மீது சாய்த்தது. இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிகள் விரட்ட வனத்துறையினர் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.