கோவை, துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து உலா வந்து கொண்டு உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பன்னிமடை தீபம் கார்டன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகளை கண்ட அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டார்ச் லைட் அடித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்டிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு கதிர் நாயக்கன்பாளையம், லட்சுமி நகர், பேஸ் 3 ரேணுகாபுரம் குடியிருப்பு பகுதிக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு வளர்க்கப்பட்டு இருந்த வாழை மரங்களை திண்ணத் தொடங்கியது. அதை கண்ட ஒரு குடும்பத்தினர் விட்டா காம்பவுண்டுக்கு உள்ளயே நுழைந்து விடும் என்று அச்சத்தில் உயிரை பாதுகாத்துக் கொள்ள வீட்டில் இருந்து வெளியேறி மொட்டை மாடிக்கு சென்றனர். அப்பொழுது செல்போனில் வீடியோ பதிவு செய்து, இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பெரியநாயக்கன் பாளையம் வனசரக வனத் துறையினர் அங்கு இருந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தொடர்ந்து இரவு நேரங்களில் அப்பகுதியில் உணவு தேடி உலா வரும் காட்டு யானைகளால் ஆபத்து ஏற்படும் முன்பு அதனை தடுத்து நிறுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து, அந்த பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.