Skip to content

நாங்கள் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

கடலூர்  மஞ்சகுப்பம் மைதானத்தில் நடந்த விழாவில் கடலூரில் ரூ.704.89 கோடி மதிப்பிலான 602 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.384.41 கோடி மதிப்பிலான 178 புதிய திட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மொத்தம் 44,690 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பேசிய முதலவர் ஸ்டாலின், ”மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை காண முடிவதே விடியலின் அடையாளம். திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. அறிவிக்காத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது; மகளிர் முன்னேற்றத்திற்கு சிறு தடை கூட ஏற்படக்கூடாது என்ற வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”எனது ஒரே இலக்கு மக்கள்தான். நான் செய்யவேண்டிய நன்மை மட்டுமே என் கண்களுக்கு தெரியும். அவதூறுகள், வீண் புகார்கள், வெட்டிப் பேச்சுகளில் நான் கவனம் செலுத்துவதில்லை. ரூ.1000 உரிமைத்தொகையை, “என் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர்” என பெண்கள் கூறுவது எனக்கான பெருமை” என்று கூறினார்.

மேலும் புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவோம் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ”கல்வியில் அரசியல் செய்வது நாங்களா? நீங்களா? மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது அரசியல் இல்லையா? பல்வேறு மொழிகள் கொண்ட நாட்டை ஒரே மொழி கொண்ட நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா? புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று கூறுவது அரசியல் இல்லையா?

தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கும் வரியை தர முடியாது என்று கூற எங்களுக்கு ஒரு நொடி ஆகாது. தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம். தமிழர்களின் தனித்துவ போராட்டக் குணத்தை பார்க்க ஆசைப்படாதீர்கள். மாநிலங்கள் வளர்ச்சியால் நாடுதான் பயன்பெறும். மத்திய அரசு மாநில வளர்ச்சியை தடுக்கிறது. மாநிலத்திற்கான நிதியை அளிக்க மறுக்கிறது தேசியக்கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி நடக்கிறது.

நமது பிள்ளைகளை மீண்டும் கல்விச்சாலைக்கு வராமல் தடுக்க பார்க்கிறார்கள். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?; இந்தியை வளர்க்கக் கொண்டு வரப்பட்டதே தேசியக் கல்விக்கொள்கை ஆகும். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சியின் தத்துவம். இப்போது இருக்கும் ஒன்றிய அரசு இந்தியாவுக்கே சாபக்கேடு” என்று ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், ””தாய்மொழியை வளர்க்கப் போவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் கூறியுள்ளார். தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும், இந்தி மொழியால் தங்களின் தாய் மொழியை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், உங்களின் சதித்திட்டத்தின் ஆபத்து புரியும். நீங்கள் வந்துதான் வளர்க்க வேண்டும் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை” என்று காட்டமாக கூறினார்.

error: Content is protected !!