கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வந்த உயர்நிலைப்பள்ளி சிதலமடைந்திருந்ததால் 2021 ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு செயல்பட்டு வந்த பள்ளி அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் 3 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு சமுதாய கூடத்தில் போதிய வசதி இல்லை எனவும் மூன்று ஆண்டுகளாக பள்ளி கட்டிடம் கட்டாமல் காலதாமதப்படுத்துவதால் பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளை சமுதாய கூடத்தில் நடத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் குற்றம் சாட்டி இன்று தோட்டக்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுடன் சேர்ந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் 100- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டாட்சியர், போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.