திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ரஹ்மான். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது வென்று தமிழர்களைப் பெருமைப்படுத்தினார் என ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர். அவரது இசையமைப்பில் தற்போது ‘அயலான்’ படம் வெளியாக இருக்கிறது.
இப்படியான சூழலில்தான் தனக்கு தற்கொலை எண்ணம் வந்தது என இசையமைப்பாளர் ரஹ்மான் பேசியுள்ள பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர் பேசியிருப்பதாவது, “எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் பலமுறை தோன்றியது. அப்போது என்னுடைய அம்மா என்னிடம் வந்து, ’நீ மற்றவர்களுக்காக வாழ வேண்டும். அப்படி இருக்கும்போது உனக்கு அந்த எண்ணம் தோன்றாது’ எனக் கூறினார். உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள். ஒருவருக்கு நீங்கள் இசையமைத்துக் கொடுப்பதாக இருக்கலாம். உணவு வாங்கி கொடுக்கலாம் அல்லது வெறும் புன்னகையை கூடத் தரலாம். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் தற்கொலை எண்ணத்தைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கை மீது உங்களுக்குப் பிடிப்புக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.