தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் தங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பிற வங்கிகளிடமிருந்து கடன் வாங்கித் தரும் பணி மேற்கொள்கிறது. இதற்காக கடன் பெறும் உறுப்பினர்கள் தங்கள் வாங்கும் கடன் தொகையில் 10 சதவீதத்தை சேமிப்பு தொகையாக கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்திருப்பது வழக்கம். இவ்வாறு 600க்கும் மேற்பட்ட, முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக துப்புரவு பணியை செய்த, துப்புரவு பணியாளர்களுக்கு, இந்த கூட்டுறவு கடன் சங்கம் ரூ,ஐந்தரை கோடி நிலுவைத் தொகையை பல ஆண்டுகளாக வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது.
மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் துப்புரவு பணியாளர்கள் சேமிப்பு தொகையை, தஞ்சாவூர் மாநகராட்சி தனது சொந்த தேவைக்காக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது, விதிகளுக்கு புறம்பானது.
இது துப்புரவு பணியாளர்களின் நலனுக்கு எதிரானது. எனவே அந்த தொகை முழுவதும் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிலுவையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை பற்றிய பட்டியலை பார்வைக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நம் நகரில் 30 ஆண்டுகள் முகம் சுழிக்காமல் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள, தூய்மை பணியாளர்களின் உழைப்பை, அதன் பயனை உடன் வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.