கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் தண்ணீர் பாலம் அருகில் வசிப்பவர் கணபதி, சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷாந்த் என்ற மகன் உள்ளார்.
இவர்கள் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் வசித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் சிறுவனுக்கு அவரது தயார் சாப்பாட்டு ஊட்டி விட்டுள்ளார். அதன் பிறகு வீட்டினுள் சென்று வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அரை மணி நேரம் கழித்து சிறுவனை காணாமல் தேடியுள்ளார். அக்கம் பக்கத்து வீடுகளில் சிறுவன் இல்லாததால்
அருகில் உள்ள வாய்க்காலில் இறங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டு அருகில் உள்ள மாயனூர் கதவணைக்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்திய பிறகு வாய்க்காலில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடி சிறுவனின் உடலை அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும் மீட்டனர். மாயனூர் காவல் நிலைய போலீசாரும் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுட்டித் தனமாக சுற்றித் திரிந்த ஒன்றரை வயது சிறுவன் வாய்க்கால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுவனின் உடலை அப்பகுதி மீனவர்களும், பொது மக்களும் மீட்டுள்ளனர்.