Skip to content
Home » நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

காரைக்காலில் இருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றுக்கொண்டு நேற்று இரவு 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று பெரம்பலூருக்கு புறப்பட்டது. லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தான் குடிகாடு பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மகன் அந்தோணி ஆனந்தராஜ் (40) என்பவர் ஓட்டி வந்தார்.

வரும் வழியில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் லாரி டயர் பஞ்சர் ஆனது. இதனை சரி செய்து விட்டு அந்தோணி ஆனந்தராஜ் லாரியை தஞ்சாவூர் நோக்கி ஓட்டி வந்தார்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் மாரியம்மன் கோவில் எதிரில் வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு அருகில் டிரைவர் அந்தோணி ஆனந்தராஜ் பிரேக் அடித்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி டயர்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. புகை வருவதை கண்டவுடன் லாரிலிருந்து டிரைவர் உடனடியாக இறங்கிவிட்டார். 10 டயர்களும், டீசல் டாங்கும் பற்றி எரிய ஆரம்பித்தது. லாரியில் ஏற்றி வந்த நிலக்கரியும் தீப்பிடிக்க அதில் இருந்து அதிக புகை வந்தது.

உடன் இது குறித்து தஞ்சாவூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அரைமணி நேரத்திற்கு மேல் போராடி லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதில் லாரியில் ஏற்றி வந்த பாதி அளவு நிலக்கரி எரிந்து சாம்பலானது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!