Skip to content

கோவையில் கால்நடை தீவனப் பயிர்களை சூறையாடிய காட்டு யானைகள் கூட்டம்…..

  • by Authour

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் கூட்டம், அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள அரிசி பருப்பு உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை வனத் துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து யானைகளை கண்காணித்து விரட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் யானைகள் வராமல் தடுக்க வேலி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனாலும் தற்பொழுது வரை அந்தப் பணிகள் நடைபெறவில்லை என பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு தடாகம், மாரியம்மன் கோவில், வடக்குப் பகுதியில் உள்ள வாத்தியார் தோட்டத்திற்கு குட்டிகளுடன் புகுந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டு உள்ள கால்நடை தீவனப் பயிர்களை தின்று கொண்டு இருந்தது. அங்கு வந்த தோட்டத் தொழிலாளர்கள் அதன் மீது டார்ச் லைட் அடித்து உள்ளனர். அந்த ஒளியை கண்டு யானைகள் திரும்பி வனப் பகுதிக்குள் ஓடியது. அதனை அங்கு இருந்த தொழிலாளி ஒருவர் உரிமையாளர்களுக்கு தெரிவிக்க தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகளை விவசாயி சங்கக் குழுவில் பதிவு செய்து இதுபோன்று அப்பகுதியில் உள்ள பல்வேறு தோட்டங்களில் உள்ள பயிர்களை யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாகவும், அதனை நிரந்தரமாக தடுக்க வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!