சென்னையில் போலி கல்வி சான்றிதழ் சமர்பித்து அமெரிக்கா செல்ல விசா பெற முயன்றதாக அமெரிக்க தூதரக அதிகாரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ருசிகேஷ் ரெட்டி மற்றும் திவாகம் ரெட்டி ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இன்ஜினீயர் படித்த ருசிகேஷ் ரெட்டி ஜவுளிக்கடை நடத்தி வந்ததும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஹைதராபாத்தில் சித்தா கன்சல்டன்சி என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வெளிநாடு செல்பவர்களுக்கு போலி கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை அனுபவ சான்றிதழ் தயாரித்து கொடுத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றது தெரியவந்தது.

மேலும் இவர்களை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு சென்னை வில்லிவாக்கத்திலுள்ள முகமது ரியாஸ் மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனத்திலிருந்து போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த முகமது ரியாச் மற்றும் மகேஷ்வரன் ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கல்வி நிறுவனம் நடத்தி வந்த ரியாஸ் கொரோனா காரணமாக நஷ்டம் அடைந்ததால், 2019ம் ஆண்டு முதல் நிறுவனம் நடத்தி போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இந்தாண்டு மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 33 லட்சத்து 73 ஆயிரத்து 41 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகை கௌதமி வழக்கில் முக்கிய நபர்கள் முன்ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இரண்டாவது முக்கிய நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.