Skip to content
Home » ஒரு நாயின் விலை ரூ.20 கோடி….பெங்களூரு தொழில் அதிபர் வாங்கினார்

ஒரு நாயின் விலை ரூ.20 கோடி….பெங்களூரு தொழில் அதிபர் வாங்கினார்

தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு செல்ல பிராணிகளை தங்களது வீடுகளில் வளர்ப்பதில் அலாதி பிரியம். செல்ல பிராணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடுகளிலேயே செய்து கொடுக்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு நாய் வாங்கி அனைவரது புருவத்தையும் உயர்த்த செய்து உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூருவில் உள்ள ‘கடபோம்ஸ் கென்னல்ஸ்’ என்ற நாய் விற்பனை கடையின் உரிமையாளர் சதீஷ். தொழில் அதிபர். இவர் தான் ரூ.20 கோடி கொடுத்து ‘காகேசியன் ஷெப்பர்டு’ இன நாயை வாங்கி உள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து சதீஷ் இந்த நாயை வாங்கி உள்ளார். அந்த நாய்க்கு தற்போது 1½ வயது தான் ஆகிறது. நாய்க்கு ‘கடபோம் ஹைடர்’ என்றும் சதீஷ் பெயர் சூட்டி உள்ளார். தைரியம், பயமின்மை இந்த நாய் பெரும்பாலும் ரஷியா, துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா ஆகிய நாடுகளில் தான் காணப்படும்.

இந்தியாவில் இந்த இன நாய்களை காண்பது மிகவும் அரிதானது. காகேசியன் ஷெப்பர்டு இன நாய்கள் ரொம்ப தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை, அறிவுத்திறன் கொண்டவை ஆகும். இந்த நாய்கள் 10 முதல் 12 வருடங்கள் உயிர்வாழ கூடியவை ஆகும். சதீஷ் ஏற்கனவே ‘திபெத்தியன் மஸ்டிப்’ இன அரிய வகை நாயை ரூ.10 கோடி, ‘அலஸ்கன் மலமுடே’ இன அரிய வகை நாயை ரூ.8 கோடி, கொரியாவை சேர்ந்த ‘தோசா மஸ்டிப்ஸ்’ இன நாயை ரூ.1 கோடி கொடுத்து வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20 கோடி கொடுத்து நாய் வாங்கியது குறித்து சதீஷ் கூறுகையில், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ”காகேசியன் ஷெப்பர்டு” இன நாயை ரூ.20 கோடி கொடுத்து வாங்கினேன். திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் ‘கடபோம் ஹைடர்’ கலந்து கொண்டு 32 பதக்கங்களை வென்றது. ‘கடபோம் ஹைடர்’ அனைவருடனும் பாசத்துடன் பழகி வருகிறது. தற்போது எனது வீட்டில் ‘கடபோம் ஹைடருக்கு என தனியாக குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கி உள்ளேன்’. கடந்த நவம்பர் மாதம் ‘கடபோம் ஹைடரை அனைவருக்கும் அறிமுகப்படுத்த விரும்பினேன்’. ஆனால் தற்போது ‘கடபோம் ஹைடருக்கு தலைமுடி கொட்டும் பிரச்சினை உள்ளது’. இதனால் அடுத்த மாதம் ‘கடபோம் ஹைடரை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவேன்’. ”காகேசியன் ஷெப்பர்டு” இனத்தை சேர்ந்த 2 நாய் குட்டிகளை ரூ.5 கோடி கொடுத்து வாங்கி உள்ளேன். நாயையும், குட்டிகளையும் நானே வளர்க்க உள்ளேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *