Skip to content

தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

செங்கல்பட்டு அடுத்த  மேலச்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (28) இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும்  வண்டலூர் அடுத்த கண்டிகையை சேர்ந்த ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கரை வயதில்  ஆல்வின் ஜோ மற்றும் ஒரு வயதில் அகஸ்டின் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று குழந்தை அகஸ்டினுக்கு தாய் ஜாய்ஸ் வீட்டின் வெளியே அமர்ந்து உணவு ஊட்டியுள்ளார். உணவு ஊட்டிய பிறகு குழந்தையை வெளியே விட்டு விட்டு ஜாய்ஸ் மட்டும் வீட்டின் உள்ளே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது குழந்தை அகஸ்டின் காணவில்லை, இந்நிலையில் சுற்றி தேடி பார்த்த போது வீட்டின் அருகில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பக்கெட்டில் குழந்தை அகஸ்டின் தலைக்குப்புற கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அகஸ்டினை  செங்கல்பட்டு அரசு பொது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த குழந்தை அகஸ்டின் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் மேலச்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது