வறுமையில் வாழ்ந்து வரும் தன்னை கடை நடத்த விடாமல் செல்வராஜ் என்பவர் இடையூறு செய்வதாகவும் இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இருதய மைக்கேல் ராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக டீசல் பாட்டிலுடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரைப் பார்த்த பாதுகாப்பு பணி காவலர்கள் உடனடியாக அந்த டீசல் பாட்டிலை கைப்பற்றினர்.
கோவை, மதுக்கரை பகுதியைச் சேர்ந்த இருதய மைக்கேல் ராஜ், மதுக்கரையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும் இவரது கடைக்கு அருகிலேயே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான டீ ஸ்டாலை செல்வராஜ் என்பவர் நடத்தி வருவதாகவும் கூறுகிறார். இந்நிலையில், வியாபாரம் சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் செல்வராஜ் தற்போது தன்னை கடை நடத்த விடாமல் இடையூறு செய்வதாகவும் மைக்கேல் ராஜ் கூறுகிறார்.
லோன் வாங்கி கடை நடத்தி வரும் தன்னால் தற்பொழுது கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் வறுமையில் வாடி வருவதாகவும் கூறினார். மேலும், இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய மைக்கேல் ராஜ், தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக டீசல் பாட்டிலுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.