Skip to content

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

  • by Authour

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில்  அதிமுக, பாஜக தவிர சட்டமன்ற கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில்  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். அவர் பேசியதாவது:

நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நமது சட்ட போராட்டத்தை தூய்வில்லாமல் தொடர்ந்து நடத்தினால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார். பின்னர், கீழ்க்காணும் தீர்மானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

இந்தவகையில், நீட் தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023ம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி தீர்மானத்தை வரவேற்றுப் பேசியதுடன், நீட் தேர்வு முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் பேசினர். பின்னர், நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும், சட்டப் போராட்டத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர்.

 

.

error: Content is protected !!