சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை. அவர் தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று புகார் தஞ்சை போலீசாருக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வாலிபருடன் அந்த சிறுமி நிற்பதை போலீசார் கண்டுள்ளார். உடன் அந்த சிறுமி மற்றும் வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். இதில் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இருவரையும் அழைத்து சென்று ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் அந்த சிறுமியை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.ஜெகதீஸ்வரன். கூலித் தொழிலாளி. இவர் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதை சிறுமியும் நம்பி பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஜெகதீஸ்வரன் சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துவிட்டார்.
பின்னர் அந்த சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்தபோது தஞ்சைக்கு புறப்பட்டு வா என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார். இத்தகவலை ஜெகதீஸ்வரனுக்கும் தெரிவித்துள்ளார். அப்போது ஜெகதீஸ்வரன் இப்போது பேசிக் கொண்டு இருக்கும் சிம்மை கழற்றி விட்டு வேறு ஒரு சிம்மில் இருந்து பேசு என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சிறுமியும் செய்துள்ளார்.
பின்னர் கடந்த 13ம் தேதி தஞ்சாவூருக்கு வந்த சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் ஜெகதீஸ்வரன் போனை எடுக்கவும் இல்லை. மறுபடியும் தொடர்பு கொள்ளவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி செய்வதறியாது அழுது கொண்டே தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது இதை கவனித்த ஒருவர் அந்த சிறுமியை அணுகி எதற்காக அழுகிறாய் என்று கேட்க தன்னை பற்றிய விபரங்களை சிறுமி அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர் என் வீட்டிற்கு வா. பின்னர் உன் காதலனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று அக்கறைக்காட்டுவது போல் நடித்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த போது போலீசில் சிக்கி உள்ளார். இத்தகவல்களை சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை விசாரித்துள்ளனர். இதில் அவர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த சி.புவனேஸ்வரன் (30) என்பதும், வீட்டில் மனைவி இல்லாத நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும் சிறுமியை காதலித்த ஜெகதீஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியை பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.